கைது செய்யப்பட்ட இளமின் பொறியாளர் மணிகண்டன் 
செய்திகள்

மின் இணைப்பை மாற்றி கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்- கைது செய்யப்பட்ட அதிகாரி கடலூர் சிறையில் அடைப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின் இணைப்பை மாற்றி கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அதிகாரி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரிஷிவந்தியம்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 33), விவசாயி. இவர் தனது தந்தை ஜெயராமன் பெயரில் இருந்த மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற விரும்பினார்.

இதையொட்டி அவர் வடபொன்பரப்பியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இளமின்பொறியாளராக இருந்த மணிகண்டன் (32) என்பவரிடம் விண்ணப்பித்தார். அதற்கு அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மின்இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று கூறினார்.

இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் அன்பழகன் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அன்பழகன் வடபொன்பரப்பியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது இளமின் பொறியாளர் மணிகண்டனிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுக்க முயன்றார். அதற்கு மணிகண்டன், இங்கு வைத்து பணம் தரவேண்டாம், அலுவலகத்தின் வெளியே கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் பள்ளி வாசல் அருகே வந்து வாங்கிக்கொள்வதாக கூறினார்.

இதையடுத்து அன்பழகன், பள்ளி வாசல் அருகில் சென்று நின்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரும் பள்ளி வாசல் அருகே சென்று மறைந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன், அன்பழகனிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை வாங்கினார். உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிகண்டனை பிடிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார். உடனே போலீசார் காரில் அவரை துரத்தி சென்றனர். அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மணிகண்டன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.