சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், திருமயம் பாம்பாற்று பாலம் அருகில் கடந்த 11-ந் தேதி அரசு பஸ்சும், காரும் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த சக்திவேல் என்கிற அலெக்ஸ், செந்தமிழ்செல்வன், பாஸ்கரன், பாலச்சந்திரன், கணேசன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், மலைக்குடிப்பட்டி கிராமம் அருகே கடந்த 12-ந் தேதி மதுரையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ்சும், லாரியும் மோதிய விபத்தில் பஸ் கண்டக்டர் சுப்பிரமணியன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராஜமாணிக்கம் ஆகியோர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயம் அடைந்தனர் என்ற செய்தியையும் அறிந்து வேதனை அடைந்தேன்.
உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர் களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.