திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் திருச்செந்தூர்- பரமன்குறிச்சி ரோட்டில் சுடலைமாட சுவாமி கோவில் அருகில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர். அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது, அதில் காப்பி நிற கட்டிகளாக 25 கிலோ எடை கொண்ட போதை பொருள் இருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கனகரத்தினம் மகன் செந்தில்குமார் (வயது 43) மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்த முத்துகிருஷ்ணன் மகன் துரைராஜ்(44) என்பதும் தெரியவந்தது. இவர்கள் கடத்தி வந்த போதை பொருள் கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் ‘சரஸ்‘ என்பது கண்டறியப்பட்டது. இவர்கள் கடத்தி வந்த போதை பொருளின் மொத்த மதிப்பு ரூ.2.5 கோடி ஆகும்.
இது நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் விளைவிக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்டு வெளிநாடுகளுக்கு இந்த போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற பொருட்கள் கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 வாரங்களில் போதை பொருட்கள் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு லாரி, 3 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் பரமன்குறிச்சி ரோட்டில் சுடலைமாட சுவாமி கோவில் அருகில் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ‘சரஸ்‘ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதை பொருள் எங்கிருந்து வருகிறது, யார் பின்னணியில் உள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதை பொருட்கள் கடத்தியவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.