பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள். 
செய்திகள்

திருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே உள்ள ரெட்டி குண்டா பகுதியில் இன்று காலை ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மினி வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

திருமலை:

திருப்பதி அருகே உள்ள ரெட்டி குண்டா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதற்கு தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவான டாஸ்க் போர்ஸ் போலீசாருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். வீட்டின் அருகே சென்டரிங் பலகைகளுக்கு அடியில் மறைத்து வைத்து செம்மரக்கட்டைகளை கடத்தல் கும்பல் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் கடத்தல் கும்பல் வேனை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து, ரூ.1 கோடி மதிப்பிலான 42 செம்மரக்கட்டைகளை போலீசார் மினி வேனுடன் பறிமுதல் செய்தனர்.

மினி வேனின் பதிவெண் போர்டுகள் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என 2 இருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். #Tamilnews