ராயபுரம்:
சவுகார்பேட்டை காசி செட்டி தெருவில் வாட்ச் கடை நடத்தி வருபவர் ஜனவரம். இந்த கடையில் பிரபல வாட்ச் நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் விற்கப்படுகின்றன.
இங்கு வியாபாரிகள் மொத்தமாக கைக்கடிகாரங்களை வாங்கி செல்வார்கள். ரூ.4ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வாட்சுகள் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஜனவரத்தின் கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி கைக்கடிகாரங்கள் விற்கப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்தது.
இது பற்றி விசாரிக்க வடசென்னை கூடுதல் கமிஷனர் ஜெயராமுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து யானைக்கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூலியட் சீசர் தலைமையில் போலீசார் நேற்று மாலை ஜனவரத்தின் வாட்ச் கடையில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
கைக்கடிகாரங்களை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது. பிரபல நிறுவனங்களின் பெயரில் விலை உயர்ந்த வாட்சுகளை போலியாக தயாரித்து குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளது தெரிந்தது.
இதையடுத்து கடையில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 4000-க்கும் மேற்பட்ட போலி வாட்சுக்களை பறிமுதல் செய்தனர். இது தெடர்பாக கடை உரிமையாளர் ஜனவரம், ஊழியர்கள் சரவணன், கணேஷ், ராஜி ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் போலி வாட்சுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.