சென்னை:
சென்னையில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள தயாரிப்பு ஆலையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு பணிகளை ஈச்சர் மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. புதிய ஆலையோடு சேர்த்து சென்னையில் மட்டும் மூன்று ஆலைகளில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதிய தயாரிப்பு ஆலைக்கான பணிகள் அக்டோப்ர் 2015-ம் ஆண்டு துவங்கிய நிலையில், 15 மாதங்களில் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய தயாரிப்பு ஆலை 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு சுமார் மூன்று லட்சம் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. எனினும் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பணிகளை தொடர்ந்து வரவேற்பு மற்றும் விற்பனைக்கு ஏற்றவாரு தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
முந்தைய நிதியாண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 6.67 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. புதிய தயாரிப்பு ஆலைகளை சேர்த்து நடப்பு நிதியாண்டில் 8.25 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தயாரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகளில் மட்டும் ரூ.800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
பிரான்டின் புதிய மோட்டார்சைக்கிள் பேரலெல்-ட்வின் பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது, இவை ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ராயல் என்ஃபீல்டு மாடல்கள் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.