சென்னை:
திருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டான்குப்பம் கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அறிவழகன் (வயது 24).
ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது. ரவுடி பல்புகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் அறிவழகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் மாட்டான்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் அறிவழகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் அருகில் உள்ள வேறு வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில் அறிவழகன் வீட்டுக்குள் 2 பேர் திடீரென புகுந்தனர். அவர்களது கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவழகன் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் 2 பேரும் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் அறிவழகனின் தலை, முகம், கை, கால்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் பலியானார். கொலையாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்தும் அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அறிவழகனை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உடனடியாக துப்பு துலங்கியது. அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அறிவழகனுக்கும் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அறிவழகன் அந்த பெண்ணின் ஆடையை கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அறிவழகனுக்கும், அந்த பெண்ணின் மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாகவே அவர்கள் இருவரும் சேர்ந்து அறிவழகனை வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அறிவழகன் கொலையில் கொலையாளிகளின் தாய்க்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
ரவுடி அறிவழகன் கொலை காரணமாக மாட்டாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதனையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க அப்பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.