புதுச்சேரி:
முத்தியால் பேட்டை வைத்திகுப்பத்தை சேர்ந்தவர் கார்த்திக். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர், பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார். நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் அங்கு குடியேறினார். இவர், தனது நண்பர்களுடன் வெடிகுண்டு தயாரிக்க முடிவு செய்தார்.
இதற்கான மூலபொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். இன்று காலை கார்த்திக் தனது நண்பர்களுடன் வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்தார்.
அப்போது கர்த்திக் தயாரித்து கொண்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவரது கை விரல்கள் துண்டானது. இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கியாஸ் சிலிண்டர்தான் வெடித்து விட்டது என ஓடி வந்தனர். ஆனால், அங்கு வந்து பார்த்த போதுதான் வெடிகுண்டு தயாரித்த போது வெடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து கார்த்திக்கின் நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டு வெடிப்பின் போது கார்த்திக்கின் மனைவி சமையல் அறைக்குள் இருந்ததால் தப்பினார். குண்டு தயாரித்த போது அவருடன் இருந்த நண்பர்கள் யார்? என்பது தெரியவில்லை. அவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்கள் தலைமறைவாகி விட்டார்கள்.