செய்திகள்

போலீசார் பிடிக்க முயன்றதால் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற ரவுடி உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் போலீசார் பிடிக்க முயன்றதால் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற ரவுடி கீழே தவறி விழுந்து இறந்தார். மற்றொரு ரவுடி படுகாயம் அடைந்தார்.

திருவொற்றியூர்:

சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராசையா (வயது 22). நெல்லிக்காரன் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (24). ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜோதிபாசு (24). 3 பேரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மூவரும் சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி வந்தனர். இதனிடையே திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி அண்ணாமலையை (30) தொழில் போட்டி காரணமாக கொலை செய்ய 3 பேரும் திட்டமிட்டனர்.

இதை அறிந்த அண்ணாமலை இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசையா உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் ராசையா உள்ளிட்ட மூவரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 4-வது மாடியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிபாசு உடனே மாடியில் இருந்து குதித்து அங்கு உள்ள மரத்தின் கிளையை பிடித்து கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். இதேபோல் ராசையா, மோகன்ராஜ் ஆகியோரும் மாடியில் இருந்து குதித்து அதே மரக்கிளையை பிடித்து தப்ப முயன்றனர். ஆனால் மரக்கிளை முறிந்ததால் 2 பேரும் தவறி கீழே விழுந்தனர்.

இதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராசையா படுகாயம் அடைந்தார். உடனே ராசையாவை போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதே ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக மோகன்ராஜ் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சேஷன் சாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT