செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சலுகை- சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது: ரூபா பேட்டி

பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கியது பற்றி சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் டி.ஐ.ஜி ரூபா கூறினார்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி.யும், தற்போதைய பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமி‌ஷனருமான ரூபா பி.பி.சி.தமிழ்சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பரப்பன அக்ரகார சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியே அங்கு ஆதாரங்களை திரட்டினேன். சசிகலாவுககு சிறையில் வழங்கப்பட்ட வசதிகள், சிறை விதிகளுக்கு முரணானது என்பது அங்கு பணியாற்றிய குறிப்பிட்ட சில அலுவலர்களுக்கு தெரியும். உயர்மட்டக் குழு விசாரணை முடிவில் அந்த உண்மை வெளிவரும்.

சிறப்பு சலுகைகளை சசிகலா அனுபவித்தது பற்றி அவருக்கான தண்டனையை உறுதிப்படுத்திய சுப்ரீம் கோர்ட்டில் யாராவது முறையீடு செய்தால் சசிகலாவின் செயலை கடுமையானதாக கருதி சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

கேள்வி:- தனக்கு எதிரான புகார் குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த சத்தியநாராயணராவ் அளித்துள்ள வக்கீல்நோட்டீசு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- அதற்கு சட்டப்படி பதில் அளிப்பேன். இந்த வி‌ஷயத்தில் கடமையை மட்டும் செய்து உள்ளதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை. சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள், தெல்கி உள்பட சிலகுறிப்பிட்ட தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்ட வசதிகள் தொடர்பான அறிக்கையில் நான் உறுதியுடன் இருக்கிறேன். இந்த வி‌ஷயத்தில் எந்த வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.