கொழும்பு:
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணியால் 19 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. 3 நாடுகள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டில் இலங்கையிடம் தோற்று இருந்தது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-
இந்திய வீரர்களின் செயல்பாடு புத்தசாலித்தனமாக இருந்தது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இலங்கை பேட்டிங் வரிசையை திணறடித்து கட்டுப்படுத்தினர். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசுவது எளிதானதல்ல. ஏனென்றால் பனித்துளி இருந்தது. அவர்கள் கடும் முயற்சி செய்து சிறப்பாக வீசி இருக்கிறார்கள்.
பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினார்கள்.
மனிஷ் பாண்டேயும், தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டனர். இது ஒரு முழுமையான கூட்டு முயற்சியாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #NidahasTrophy #NidahasTrophy2018 #SLvIND #INDvSL