ராபர்ட் பயாஸ் 
செய்திகள்

ராபர்ட் பயாஸ் ‘பரோல்’ கேட்டு மனு - அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மகன் திருமணத்துக்காக ராபர்ட் பயாஸ் தாக்கல் செய்த பரோல் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயாஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

இலங்கை அகதியான நான், ராஜீவ் கொலை வழக்கில் 1991 முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டனர்.

நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய மாநில அமைச்சரவை, கவர்னருக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், தனக்கு பரோல் வழங்கினால், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகரன் வீட்டில் தங்குவேன்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து விளக்க மளிக்க 2 வார காலம் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி., புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தனது மகளுக்கு திருமணம் நடத்துவதற்காக சமீபத்தில் பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

என்றாலும் திருமண ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் பரோலை நீடிக்கும்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீடிப்பு வழங்கப்படாததால் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மற்றொரு ஆயுள் கைதியான ராபர்ட்பயாஸ் பரோல் கேட்டுள்ளார்.