செய்திகள்

முத்துப்பேட்டை அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் கைது

முத்துப்பேட்டை அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 64 பவுன் நகை, 18 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாலை மலர்

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் எடையூர், பெருகவாழ்ந்தான் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டாக வீடு-கடைகளில் நகை, பணம், மோட்டார் சைக்கிள் என தொடர்ச்சியாக திருடு போனது. மேலும் பெருக வாழ்ந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், மற்றும் ஒரு வங்கி மேலாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் குற்றவாளிகள் குறித்து எந்தவித தடயமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர்கள் இலங்கேஸ்வரன், ஜெயந்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் அவர்களின் ரேகைகளை பதிவு செய்துவிட்டு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்களின் கைரேகைகளை ஆய்வு செய்தபோது 3 பேரும் தொடர் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் எடையூர் சிவதாஸ் தலைமமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டது.

இதில் தம்பிக்கோட்டை மேலக்காட்டை சேர்ந்த சதீஷ்குமார்(வயது26), பால முருகன்(24), கார்த்திக்(23), மன்னார்குடியை சேர்ந்த ராஜேஷ் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் 4 பேரும் பெருக வாழ்ந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், மற்றும் ஒரு வங்கி மேலாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், எடையூர் ஆசிரியை இந்திரா வீடு, மாதவன் மளிகை கடை, ராஜேந்திரன் உரக்கடை, பாண்டி, பெருகவாழ்ந்தான், பேராவூரணி பகுதிகளில் உள்ள கடைகள், வீடு ஆகியவற்றில் கொள்ளையடித்தது தெரிய வந்தது.

இதனையடுத்து தம்பிக்கோட்டையில உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த 64 பவுன் தங்க நகை, புதுக்கோட்டை அதிராம் பட்டிணம், பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகல் மறைந்து வைத்திருந்த 18 மோட்டார் சைக்கிள் களையும் போலீசார் பறிமுதல் செய்து மீட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த எடையூர் போலிசார் 4 பேரையும் கைதுசெய்து திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.

மேலும் தொடர் திருட்டு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டு தலை மறை வாக உள்ள இளவரசன் உள்பட சிலரையும் தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். #tamilnews