செய்திகள்

காட்பாடி அருகே கொள்ளை முயற்சியில் கணவன்-மனைவி அடித்துக் கொலை

கொள்ளை முயற்சியில் கணவன் மற்றும் மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் காட்பாடி அடுத்த லத்தேரி விக்கிரமாசி மேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 68). ஓய்வுப் பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி பொன்னியம்மாள் (60). இவர்களுக்கு குமார், கோபி என்ற 2 மகன்கள் மற்றும் செல்வி, சாந்தி சரளா என 3 மகள்களும் உள்ளனர்.

மகன்கள் 2 பேரும் டெல்லியில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். சரளா காட்பாடி ரெயில்வே போலீசில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் காட்பாடி மிலிட்டரி கேன்டீனில் இருந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை ஒரு ஆட்டோ டிரைவர் எடுத்துக் கொண்டு முருகேசனின் வீட்டிற்கு இன்று காலை வந்தார்.

ஆட்டோ டிரைவர் வீட்டு கதவை தட்டி பார்த்தபோது, தாழ்ப்பாள் போடாமல் இருந்தது. சத்தம் போட்டு வீட்டுக்குள் இருந்தவர்களை அழைத்தார். யாரும் வர வில்லை. உள்ளே இருந்து எந்த சத்தமும் இல்லை. சந்தேக மடைந்த கதவை திறந்து பார்த்த போது, முருகேசனும், பொன்னிம் மாளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் லத்தேரி போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

டி.எஸ்.பி.க்கள் பிரகாஷ் பாபு, அலேக்ஸ் மற்றும் லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை பார்வையிட்டனர். அவர்கள் 2 பேரையும், மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும், முருகேசனின் உடல் ஊதி இருந்தது. எனவே, ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

சோதனையில், பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளும் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்த வீடு, தென்னந் தோப்பின் நடுவே உள்ளது. வயதான தம்பதி மட்டும் தனியாக வசிப்பதை தெரிந்துக் கொண்டு திருட்டு கும்பல், கைவரிசை காட்டி இருக்கலாம். கொள்ளையை தடுக்க முயன்ற வயதான தம்பதியை கொள்ளையர்கள் அடித்துக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து, வேலூரில் இருந்து மோப்ப நாய் சன்னி கொண்டு போலீசார் சோதனையிட்டனர். மோப்ப நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து தென்னந்தோப்பில் சுற்றி சுற்றி ஓடி வந்தது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து, தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.