செய்திகள்

மயிலம் அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை

மயிலம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் பணம் கொள்ளைபோன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ளது சிங்கனூர் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவர் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரும் அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

அப்போது மர்ம மனிதர்கள் முருகன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடினார்கள். அதன் பின்பு அவர்கள் அருகில் உள்ள செந்தமிழ் (29), சாந்தி (50), பெரியசாமி ஆகியோரது வீட்டுக்குள்ளும் புகுந்தனர்.

செந்தமிழ் வீட்டில் ரூ.40 ஆயிரமும், சாந்தி வீட்டில் ரூ.3 ஆயிரமும், பெரியசாமி வீட்டில் ரூ.10 ஆயிரமும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து மயிலம் போலீசில் முருகன் புகார் செய்தார்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பால் சுதர், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் பணம் கொள்ளைபோன சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.