செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் திங்கட்கிழமை தேர்வு

நாளை மறுநாள் ஆட்சி மன்ற குழு கூட்டத்துக்குப் பின் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படுகிறது. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி விடும்.

மாலை மலர்

2016-ம் ஆண்டு மே மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி அவர் மறைவுக்கு பின் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ந்தேதி தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.

இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் அணி, பா.ஜனதா, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனால் கட்சி அலுவலகங்களில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அ.தி.மு.க.வில் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிப்பதற்காக ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தலைமை கழகத்தில் கூடுகிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலையில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் கூடி அ.தி.மு.க. வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்க உள்ளனர்.

இதில் அ.தி.மு.க. அவைத் தலைவராக உள்ள மதுசூதனனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? அல்லது புதுமுகத்துக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது தெரிய வரும்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்ற போது அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரசாரம் செய்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் பிரசாரம் செய்தனர்.

இப்போது அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்த நிலையில் இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துவிட்டது. டி.டி.வி. தினகரன், தனி அணியாக தனியாக செயல்படுகிறார்.

எனவே இந்த சூழலில் அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை.

இதுபற்றி மதுசூதனனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தலைமை என்ன கட்டளையிடுகிறதோ அதை ஏற்று செயல்படுவேன் என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், “மதுசூதனன் இந்த தொகுதியின் மண்ணின் மைந்தர், முன்னாள் அமைச்சரான அவர் அவைத் தலைவராக இருக்கிறார். இதே தொகுதியில் முன்பு வெற்றி பெற்றவர். கடந்த முறை வேட்பாளராக போட்டியிட்டபோது 95 சதவீத பிரசாரத்தை முடித்து விட்ட நிலையில்தான் தேர்தல் ரத்தானது. எனவே அவரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்” என்றார்.

ஆனால் மதுசூதனனுக்கு பதில் வேறு வேட்பாளரை நிறுத்தலாமா என்று மற்றொரு தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுசூதனன் போட்டியிடத் தயார் என்று கூறினாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் சவால்களை வெல்லக்கூடிய வகையில் வேட்பாளரை தேர்வு செய்வது அவசியம் என்றும் தொகுதியில் சுறுசுறுப்புடன் பணியாற்றக் கூடிய சக்தி வாய்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளராக புதுமுகம் நிறுத்தப்படுவாரா? அல்லது மதுசூதனனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை மறு நாள் ஆட்சி மன்ற குழு கூட்டத்துக்குப் பின் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படுகிறது. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி விடும்.