செய்திகள்

தண்டையார்பேட்டையில் நெரிசல்: இறுதி கட்ட பிரசாரத்தில் போக்குவரத்து முடங்கியது

ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதையடுத்து அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் தண்டையார்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதையடுத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்காக தி.மு.க.வினர் திரண்டனர். அவரது பிரசாரம் முடிந்ததும் அ.தி.மு.க.வினரும் மற்றும் தினகரன் ஆதரவாளர்களும் அங்கு அதிக எண்ணிக்கையில் கூடினர்.

இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொருக்குப்பேட்டை ரெயில்வேகேட் பகுதியில் இருந்து மணலி செல்லும் சாலை மற்றும் வைத்தியநாதன் மேம்பாலம் ஆகியவற்றில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலால் தண்டையார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் திணறியது.

வாகனங்கள் நகர முடியாமல் அப்படியே நின்றன. இதனால் கார், மோட்டார் சைக்கள்களில் சென்ற பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனும் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டார். அவரது காரும் நடுரோட்டில் நின்றது. இதனால் பிரசாரம் செய்ய முடியாமல் அவர் தவித்தார்.

பின்னர் மதுசூதனனை மோட்டார்சைக்கிளில் அமர வைத்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் அங்கிருந்து அழைத்து சென்றார். இதன் பின்னரே அவர் போக்குவரத்து நெரிசலில் இருந்து மீண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.