ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி. தினகரனும், ஓ.பி.எஸ். தலைமையில் இயங்கிய அ.தி.மு.க. புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.
அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க. அம்மா அணி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிவித்தது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த வக்கீல் வைரக்கண்ணன் என்பவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இருப்பினும் வழக்கு பதிவு செய்ய தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதமே வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதில் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படவில்லை, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனையடுத்து, யார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள் என்பதை ஏன் குறிப்பிடவில்லை, மேலும் சில குறிப்புகளை ஏன் நிரப்பவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் எதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.
அப்போது போலீஸ் தரப்பில், தெரிவிக்கப்பட்ட பதிலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எங்கள் தரப்பில் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கே உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியது சென்னை காவல் ஆணையரின் பொறுப்பாகும், அதில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை.
ஆனால், காவல்துறை விசாரணையில் தலையிடாமல் தாங்களும் இந்த விவகாரம் தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.