செய்திகள்

ஆர்.கே நகர் வாக்காளர்களை 2, 3-ந்தேதிகளில் சந்தித்து டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவிக்கிறார்

இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டி.டி.வி. தினகரன் வருகிற 29-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு தலைமைச் செயலகம் சென்று சபா நாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.

அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி நல்ல நாள் என்பதால் பதவி ஏற்க முடிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை அடுத்த வாரம் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்துள்ளார். அனேகமாக 2 அல்லது 3-ந்தேதி டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் செல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் கூடுதலாக பெற்று 89,013 ஓட்டுகள் வாங்கி வெற்றி வாகை சூடியதால் ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேளதாளம் முழங்க திறந்த ஜீப்பில் தொகுதி மக்களை சந்திக்க வருவதால் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க வீதிக்கு வீதி பெண்கள் தயாராகி வருகின்றனர். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் 2 நாட்கள் திருவிழா போல் களைகட்ட உள்ளது.

சட்டசபை அடுத்த மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குவதால் டி.டி.வி. தினகரன் தனது கன்னிப் பேச்சில் அரசை கடுமையாக சாடி பேசுவார் என்றும் இதுவரை என்னென்ன திட்டங்கள் நிறைவேறாமல் பாதியில் கிடப்பில் உள்ளது என்பதை பட்டியலிட்டு மக்கள் படும் வேதனைகளை ஆதாரத்துடன் பேசி கலக்குவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.