ராஞ்சி:
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி பணம் எடுத்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், லாலு மற்றும் மற்றொரு முன்னாள் முதல் மந்திரி ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா 5 லட்சம் அபராதம் விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் இன்று தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், லாலுவின் மகனும் பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அம்மாநில முன்னாள் துணை முதல் மந்திரியுமான இந்த தீர்ப்பை எதிர்த்து தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட் வரை போவோம் என தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கவர்னர் சத்ய பால் மாலிக்-கை இன்று சந்தித்து புகார் மனு அளித்த தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆனால், சி.பி.ஐ. கோர்ட்டின் உத்தரவு இறுதியானது அல்ல. இந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வோம். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட் வரை போவோம்.
மக்களின் ஹீரோவாக கருதப்படும் லாலு பிரசாத் யாதவ், முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். படைகளின் தூண்டுதலால் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக பொது கருத்து நிலவுகிறது. அவருடைய செல்வாக்கை கண்டு அரசியல் எதிரிகள் நடுங்குகின்றனர்.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் பீகார் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் போன்றவர்கள் இப்போதே சுற்றுப்பயணம் செய்ய தொடங்கி விட்டனர்.
இந்த தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவுக்கு சட்டரீதியான சிரமங்களை ஏற்படுத்தினால் தாங்கள் சுகமாக சவாரி செய்யலாம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், எப்போது தேர்தல் நடந்தாலும் அவர்களுக்கு ராஷ்டரிய ஜனதாதளம் சரியான பதிலடி கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #LaluPrasadYadav #FodderScamCase #tamilnews