நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே உருவாகி உள்ள புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத வகையில் இந்த மழை இன்று 3-வது நாளாக நீடிப்பதால் குமரி மாவட்டமே ஸ்தம்பித்துபோய் உள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பெரிய மரங்களும், மின் கம்பங்களும் உடைந்து விழுந்து கிடக்கின்றன. இதனால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் இந்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள்.
ஏற்கனவே பெய்த மழை காரணமாக குமரி மாவட்ட அணைகளில் நீர் மட்டம் அதிக அளவு காணப்பட்டது. பெரும்பாலான குளங்கள் நிரம்பி விட்டன. மேலும் குழித்துறை ஆறு, பழை யாறு ஆகியவற்றிலும் வெள்ளம் அதிக அளவு சென்று கொண்டிருந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பழையாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நாகர்கோவில் ஒழுகின சேரி பகுதியில் பழையாற்றில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்தால் கரையை தாண்டி வெளியேறிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் இரவோடு இரவாக அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர்.
மேலும் பழையாற்று வெள்ளம் சாலையிலும் கரைபுரண்டு ஓடுவதால் அந்த வழியாக பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் தோவாளை பகுதியிலும் சாலைகளில் அதிக அளவு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நெல்லை-நாகர்கோவில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் பஸ்கள் வழக்கமான பாதையில் வர முடியாததால் காவல்கிணறு, கன்னியாகுமரி, மணக்குடி வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை நிலவுகிறது.
பழையாற்று வெள்ளம் காரணமாக சுசீந்திரம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கும் மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர். ஏராளமான மக்கள் மாடி வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். சுசீந்திரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளம் பீதி தொடர்ந்து நீடிப்பதால் சுசீந்திரம் பகுதி மக்கள் விடிய விடிய தூங்காமல் பயத்துடனேயே விழித்திருந்தனர். சுசீந்திரம் பாலத்தின் மேல் பல அடிக்கு வெள்ளம் செல்வதால் அந்த வழியாகவும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் பரப்புவிளை, வீர நாராயணமங்கலம், ஆசிரா மம் போன்ற பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்குதாமரை குளம் பகுதியிலும் வெள்ளம் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுசீந்திரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாணுமாலையசுவாமி கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. சுசீந்திரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதே போல குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள குழித்துறை ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இங்கும் பல இடங்களில் சாலையின் மேலே மழை வெள்ளம் ஓடு கிறது.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பழையாறு, குழித்துறை ஆறு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீறிப்பாறை, காளிகேசம் பகுதிகளிலும் கனமழை நீடிக்கிறது. இதனால் இங்கும் பல இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் தீவுகளில் சிக்கியது போல முடங்கி உள்ளனர்.
இன்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் குமரி மாவட்டமே புரட்டி போடப்பட்டது போல காட்சி அளிக்கிறது. மீட்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.