வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்க்கட்சி, இந்த தேர்தல் முடிவை ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். ராணுவத்தினர் தங்களுக்கு ஆதரவாக இருந்து, மதுரோவை வெளியேற்ற போராடும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வெனிசூலாவில் தொடர்ந்து போராட்டங்கள், வன்முறை என பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட கராகஸ் ராணுவ தளத்தின் அருகில், குவைடோவின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசாரும், ராணுவ வீரர்களும் கலைக்க முற்பட்டபோது கலவரம் வெடித்தது. இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆனால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துவிட்டதாக அதிபர் மதுரோ தெரிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய அவர், ராணுவத்தில் ஒரு சிறு குழுவினர் அரசைக் கவிழ்க்கும் முயற்சியாக வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதிக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தீவிர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.