தபால் துறை 
செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் ஆயுள்சான்றிதழை சமர்ப்பிக்கலாம்- தபால் துறை ஏற்பாடு

மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்காக தங்களது ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை:

தமிழ்நாடு வட்ட தலைமை தபால் அலுவலக இயக்குனர் சந்தானராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்காக தங்களது ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி உடன் இணைந்து இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று இந்த சேவையை பெறலாம்.

‘போஸ்ட் இன்போ’ என்ற செயலி மூலமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்கு ஆதார் எண், செல்போன் எண், ஓய்வூதிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கும் கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.