செய்திகள்

தர்மபுரியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையன் கைவரிசை

தர்மபுரியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 14 பவுன் தங்க நகையை கொள்ளையன் அபேஸ் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி, வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜரெத்தினம் (வயது 60). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.

இவர், இவருடைய மனைவி அனந்த லட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை, கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டி விட்டு சென்றார்.

இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜரெத்தினம் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகள் காணவில்லை. மேலும் அறைகளில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், அங்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு, ராஜரத்தினம் மற்றும் அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ராஜரெத்தனம் வீட்டை பூட்டு விட்டு சென்னைக்கு சென்றதை கொள்ளையன் நோட்டுமிட்டு இருக்கிறான். அவர் வீட்டுக்கு திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்பதையும் தெரிந்து இருக்கிறான். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கொள்ளையன் நள்ளிரவு வேளையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்றுள்ளான் என்று சந்தேகிக்கிறோம் என்றனர். எனினும் நாங்கள் தீவிரமாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

எங்களிடம், சென்னைக்கு செல்கிறேன். வீட்டை பார்த்து கொள்ளும்படி ராஜரெத்தினம் தகவல் கூறி விட்டு இருக்கலாம். ஒரு தகவல் கொடுத்திருந்தால் நாங்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்போம் என்றனர்.

கொள்ளையன் யார்? என்பது குறித்து எஸ்.பி. தனிப்பிரிவு மற்றும் கிரைம்பிரிவு, உளவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.