செய்திகள்

ரூ.700 கோடி மோசடி வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் கைது

பீகார் மாநிலத்தில் தொண்டு நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் ரூ.700 கோடி மோடி வழக்கில் முன்னாள் வங்கியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

மாலை மலர்

பாகல்பூர்:

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பல்வேறு கட்டங்களாக பல கோடி ரூபாய் போலி காசோலை கொடுத்து பணபரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. சுமார் ரூ.700 கோடி அளவில் இந்த மோசடி நடந்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் முன்னாள் மேலாளர் ஏ.கே.சிங் என்பவருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கலெக்டரின் உதவியாளர் பிரேம் குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் கலெக்டரின் கையெழுத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.