செய்திகள்

சில்லரை வர்த்தக பொருட்கள் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

கடந்த 7 மாதத்தில் இல்லாத அளவிற்கு சில்லரை வர்த்தக பொருட்களின் பண வீக்க விகிதம் அதிகரித்துள்ளது. இந்த பண வீக்கத்தின் தாக்கம் இன்னும் 3 மாதம் வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

புதுடெல்லி:

நாட்டில் கடந்த மே மாதத்தில் பண வீக்க விகிதம் எந்த அளவிற்கு இருந்தது என்பது பற்றிய ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 7 மாதத்தில் இல்லாத அளவிற்கு சில்லரை வர்த்தக பொருட்களின் பண வீக்க விகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 3.05 சதவீதம் அளவிற்கு இந்த பொருட்களின் பண வீக்கம் இப்போது இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த புள்ளி 2.99 சதவீதமாக இருந்தது. அது இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.

குறிப்பாக காய்கறிகளின் விலை கடந்த மாதம் மிக அதிகமாக இருந்துள்ளது. இதுதான் இந்த பணவீக்கத்துக்கு முக்கிய காரணமாகும். இதன் மூலம் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

மேலும் ஏப்ரல், மே மாதம் தேர்தல் காலம் என்பதால் அதிக அளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. இதுவும் பணவீக்கத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

உணவு மற்றும் பானங்கள் பண வீக்க விகிதம் 1.38 சதவீதத்திலிருந்து 2.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த பண வீக்கத்தின் தாக்கம் இன்னும் 3 மாதம் வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஒருபக்கம் சில்லரை வர்த்தகம் பண வீக்க விகிதம் அதிகரித்திருந்தாலும், தொழில்துறை உற்பத்தி திருப்தியான முறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தொழில்துறையில் 2.8 சதவீதம் அளவிற்கு உற்பத்தி அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக சுரங்கத்துறை, மின்துறை போன்றவற்றில் உற்பத்தி அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT