செய்திகள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் ராணுவத்தின் அத்துமீறல்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரின் வடக்குப்பகுதியை பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்துள்ளது. ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இணைந்து சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக, இப்பகுதி மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

நிலம் அபகரிப்பதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினால் ராணுவத்தின் மூலம் மக்கள் தாக்கப்படுவதாக இப்பகுதியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாஜிரா என்ற பகுதியில் பெருந்திரளாக திரண்ட மக்கள் அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஹயாத் கான், “ பாகிஸ்தான் பிரதமருக்கும் ராணுவத்தினருக்கும் ஒன்று கூறிக் கொள்கிறேன். இது போன்ற நடவடிக்கைகளை இங்கு மேற்கொண்டால் அவர்களை (ராணுவத்தினரை) எப்படி இங்கிருந்து வெளியே வீசுவது என நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என ஆவேசமாக கூறியுள்ளார்.