செய்திகள்

ரெப்போ விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ - வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி கால் சதவீதம் உயர்த்தியதையடுத்து, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. #RBI #RBIMonetaryPolicy #RepoRate

மாலை மலர்

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றை 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் அதிகரித்து 6.25 சதவீதமாக  உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான பணவீக்கத்தைப் பொருத்தவரை முதல் அரையாண்டில் 4.8- 4.9% என்ற அளவில் இருக்கும் என்றும், இரண்டாவது அரையாண்டில் 4.7% ஆக குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியைப் பொருத்தவரை ஆண்டின் முதல் பாதியில் 7.5-7.6% என்ற அளவிலும், இரண்டாவது பாதியில் 7.3-7.4% என்ற அளவிலும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் முதல் முறையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. எனவே, வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.