மீட்பு பணி 
செய்திகள்

சிறுவன் சுர்ஜித்தை மீட்க இடைவிடாது நடைபெறும் பணி

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணி இடைவிடாது நடைபெற்று வருகிறது.

 திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணிகள் சுமார் 53 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கியது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன.  ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க ரிக் இயந்திரத்தால் இதுவரை 35 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

குழந்தையை மீட்கும் பணி நடக்கும் பகுதியில் பாறை இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. குழந்தையை பத்திரமாக மீட்கவே தீவிரமாக முயற்சித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நடுக்காட்டுப்பட்டியில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

மீட்பு பணி நடக்கும் பகுதியில் அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மீட்புப்பணிகளை  தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.