வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கோம்புபாளையம் செல்லும் வழியில் புகளுர் கால்வாய் ஓரத்தில் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.அங்குள்ள நத்த மேட்டு பாளையத்தில் தார் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மின் கம்பம் போடப்பட்டது. அக்கம்பத்தில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின் கம்பம் போடப்பட்டு பலஆண்டுகள் ஆனதாலும் தரமற்ற மின் கம்பத்தாலும் மின் கம்பம் அடி பகுதி மற்றும் கம்பம் முழுவதும் கான்கிரீட்டுகள் கீழே விழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின் கம்பம் கீழே விழுந்தால் பக்கத்திலுள்ள வீட்டின் மீதோ தார்சாலை வழியாக செல்பவர்கள் மீதோ விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதான மின்கம்பத்தை மாற்றி விபத்தினை தடுக்க வேண்டுமென குளத்து பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.