செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்: 6 மையங்களில் நாளை மறுவாக்குப்பதிவு

குஜராத்தில் முதல்கட்ட தேர்தல் நடந்த ஆறு மையங்களில் பதிவான வாக்குகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அந்த மையங்களில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

காந்திநகர்:

குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 18-ம்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 9-ம்தேதி 83 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 67 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 14-ம்தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், 9-ம்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற ஆறு மையங்களில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வத்கம், விரம்கம், டஸ்கிரோய் மற்றும் சவ்லி ஆகிய தொகுதிகளில் உள்ள ஆறு மையங்களில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 9-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலின்போது 4 தொகுதிக்குட்பட்ட 6 மையங்களில் பதிவான வாக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உள்ள இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளை அழிக்க தேர்தல் நடத்திய அதிகாரிகள் மறந்துவிட்டதே இதற்குக் காரணம். இந்த மையங்களில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும். கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்', என அதில் கூறப்பட்டுள்ளது.