புதுடெல்லி:
மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று காலை வர்த்தகத்தில் ஓரளவு மீட்சியடைந்தபோதும் பிற்பகல் மீண்டும் சரியத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடைபெற்ற முதல் நாணய கொள்கைக் கூட்டம் இதுவாகும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 5.75 சதவீதமாக நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் மூன்று முறை தொடர்ந்து ரெப்போ விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை. கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Repo #RBI #tamilnews