செய்திகள்

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி. இல்லை: ரேணுகா சவுத்ரி

சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி. வரி எதுவும் கிடையாது. சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவும் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகாசவுத்ரி கூறினார்.

மாலை மலர்

டெல்லி மேல்-சபையில் பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் பேசும் போது காங்கிரஸ் எம்.பி. ரேணுகாசவுத்ரி சத்தமாக சிரித்தார்.

அதற்கு மேல்-சபை தலைவர் வெங்கையாநாயுடு கண்டனம் தெரிவித்தார். அப்போது ரேணுகாசவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம், அவரது சிரிப்பொலி தொலைக்காட்சியில் ராமாயண தொடரில் வரும் பெண் கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது என்று மோடி கிண்டலாக கூறினார். அவர் குறிப்பிட்டது ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை கதாபாத்திரமாகும்.

இதை தொடர்ந்து மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரேணுகா சவுத்ரிக்கு சமூக ஊடகங்களில் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ரேணுகாசவுத்ரி தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவா மாநிலம் பனாஜியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

5 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்ட என்னை எதிர்மறை கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசி இருக்கிறார். தற்காலத்தில் பெண்கள் மாறிவிட்டார்கள் என்பதை அவர் மறந்துவிட்டார்.

இது பெண்களின் மீதான அவரது மனநிலையை காட்டுகிறது.

சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி. வரி எதுவும் கிடையாது. சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவும் தேவையில்லை.

நான் எப்போதும் இயல்பாக சத்தமாக சிரித்து விடுவேன். ஆனால் இப்போது எச்சரிக்கையுடன் இருக்கிறேன். மேல்சபையில் சிரித்ததற்காக அதிகார சக்திகளின் கண்டனத்துக்கு உள்ளானேன்.

பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும்? என்று எம்.பி.க்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு எனது தந்தை இறந்த போது, அவரது இறுதி சடங்குகளை செய்ததற்காக அதிகார சக்திகளிடம் இருந்து எனக்கு எதிர்ப்பு வந்தது. என் தந்தை என்னை ஒரு பெண்ணாகவோ, பையனாகவோ வளர்க்கவில்லை. இந்த நாட்டின் பிரஜையாகவே வளர்த்தார்.