டிக் டாக் வீடியோ 
செய்திகள்

‘எள்ளு வய’ பாடலுடன் நண்பர் இறந்ததாக ‘டிக்டாக்’கில் பதிவு - ஷாக் ஆன உறவினர்கள்

புதுக்கோட்டையில் அசுரன் படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வய பூக்கலியே’ என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் நண்பர் இறந்ததாக டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்த சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாலை மலர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரியாஸ், பகுர்லா. இருவரும் நண்பர்கள்.

இவர்கள் டிக் டாக்கில் பதிவிடும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்துள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து வீடியோக்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பகுர்லா இறந்துவிட்டதாக அவரது போட்டோவில் ‘கண்ணீர் அஞ்சலி, இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்’ என்று எழுதி, அசுரன் படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வய பூக்கலியே’ என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் ரியாஸ் டிக் டாக் வீடியோ ஒன்றை விளையாட்டாக பதிவிட்டுள்ளார்.

இவர்கள் டிக் டாக்கில் பிரபலம் என்பதால் இந்த வீடியோ வேகமாக பரவி இருக்கிறது. ஆனால் வீடியோவை பதிவிட்ட ரியாஸ் இரவு தூங்க சென்று விட்டார். அதே சமயம் பகுர்லாவுக்கு விவரம் தெரியவில்லை.

இந்த வீடியோ தீ போல பரவ பகுர்லாவின் வீட்டிற்கு அவரின் உறவினர்கள் துக்கம் விசாரிக்க வரத்தொடங்கி இருக்கிறார்கள்.

அப்போது பகுர்லா உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விசாரிக்க, அப்போது தான் அவருக்கு ரியாஸ் செய்த வேலை என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள பகுர்லா, ‘நான் இறந்து விட்டதாக அவர் பதிவிட்டு இருக்கிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவரை கைது செய்து அவரின் ஐ.டி.யை பிளாக் செய்ய வேண்டும்’ என்று ஆதங்கமாகக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.