திருச்சி:
திருவெறும்பூர் அருகே நேற்று இரவு ஹெல்மெட் அணியாமல் வந்ததால் தம்பதியின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உஷா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் பலியான உஷாவின் உடல் நேற்று இரவு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் உடலை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்கள் கர்ப்பிணி பெண் உஷாவின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் உஷாவின் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி பலியான உஷாவின் கணவர் தர்மராஜா கூறியதாவது:-
நாங்கள் நேற்று இரவு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றுவிட்டு, பின்னர் நெருங்கிய நண்பரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் எண்ணத்துடன்தான் வீட்டில் இருந்து புறப்பட்டோம்.
வழியில் துவாக்குடி செக் போஸ்ட் அருகே எங்களை வழிமறித்த இன்ஸ்பெக்டர் காலை டயர் மீது வைத்து எங்களை மிரட்டும் தொணியில் பேசினார். ஹெல்மெட் அணியாமல் ஏன் வந்தீர்கள் என்று அருவறுக்கத்தக்க வகையிலும் பேசினார். சட்டையையும் பிடித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். ஆனால் என்னை கொலை குற்றவாளி போல் தொடர்ந்து துரத்தி வந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆபாசமாக திட்டியதோடு, எங்களை நெருங்கி வந்து 3 முறை எங்கள் மோட்டார்சைக்கிளை எட்டி உதைத்தார். இரண்டு முறை சுதாரித்துக்கொண்ட என்னால் கடைசி முறை முடியவில்லை.
அதில்தான் நானும், எனது மனைவியும் கீழே விழுந்தோம். உஷாவுக்கு வயிற்றில் அடிபட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டது. கடைசியில் என் மனைவியையும், வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் இழந்துவிட்டேன்.
முதலில் என்னை வழி மறித்த இன்ஸ்பெக்டர் அந்த இடத்திலேயே பணம் கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேன். என்னை தொடர்ந்து துரத்தி வந்த போது கூட ஓரமாக நிறுத்தி பேசியிருக்கலாம். கடைசியில் என்னை துரத்தி வந்து உதைத்து தள்ளி என் மனைவியை பழிவாங்கி விட்டார்.
முதல்முறையாக எனது மனைவி கருவுற்றபோது அபார்சன் ஆகிவிட்டது. தற்போது முதல் குழந்தையை பெற்றெடுப்போம் என்ற ஆசையில் இருந்த எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டதே.
என் மனைவியின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உஷாவின் உடலை பெற்றுக்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews