பழனி:
பழனி அருகே அத்திமரத்து வலசு கிராமத்தில் ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. 200 மீட்டர் தூரத்தை ரேக்ளா வண்டிகள் கடக்கும் முறையில் போட்டிகள் நடைபெற்றது. குறைந்த நேரத்தில் எல்லைக் கோட்டை எட்டிப்பிடிக்கும் வண்டிகள் அடிப்படையில் வெற்றிகள் தீர்மானிக்கப்பட்டது.
ரேக்ளா ரேசில் கலந்து கொள்வதற்காக பழனி அதன் சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமல்லாது தாராபுரம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து ஏராளமான ரேக்ளா வண்டிகள் வந்திருந்தது. கேரள மாநிலத்தில் இருந்தும் இந்த ரேக்ளா ரேசில் கலந்து கொள்வதற்காக வண்டிகள் வரவழைக்கப்பட்டு இருந்தது.
போட்டியில் வெற்றியின் எல்லைக்கோட்டை எட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இந்த காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. ரேக்ளா ரேசை காண்பதற்காக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் குவிந்திருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. டி.எஸ்.பி. முத்துராமன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வெகுநாட்களுக்கு பிறகு பழனி பகுதியில் நடந்த இந்த ரேக்ளா ரேஸ் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.