புளியங்குடி:
புளியங்குடி ஆர்.எஸ்.கே.பி. தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் குருசாமி (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் சண்டை போட்டு கோபித்து கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று புளியங்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தில் ஒரு வாலிபரின் உடல் மிதந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குளத்தில் இறந்து மிதந்த வாலிபர் குருசாமி என்பது தெரியவந்தது.
இதையடுத்து குருசாமி எப்படி இறந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.