பிரியங்கா காந்தி 
செய்திகள்

எந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும்  சிபிஐ, ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. மூன்று முறை டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் ப.சிதம்பரம் இல்லாததால் விசாரணை நடத்த முடியாமல் திரும்பினர். 

தற்போது ப.சிதம்பரம் எங்குஇருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், முன்ஜாமீன் கேட்டு உச்ச  நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். 

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

எம்.பி,  நிதி மந்திரி, உள்துறை மந்திரியாக நாட்டிற்கு பல ஆண்டுகள் விசுவாசத்துடன சேவை செய்தவர் ப.சிதம்பரம். மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அச்சமின்றி உண்மையுடன் பேசி வருகிறார். 

அவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்.  உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து போராடுவோம். ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.