தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விரைவில் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசின் இலவச பாடபுத்தகங்களை வழங்க கல்வித்துறை தயாராகி வருகிறது.
இதற்காக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து உள்ள பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள 6-ம் வகுப்பு மாணவர்கள் 9 ஆயிரத்து 700 பேரும், 7-ம் வகுப்பு மாணவர்கள் 9 ஆயிரத்து 400 பேரும், 8-ம் வகுப்பு மாணவர்கள் 9 ஆயிரத்து 900 பேரும், எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள் 13 ஆயிரத்து 200 பேருக்கும் பாடபுத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் பிளஸ்-1 வகுப்புக்கு செல்லும் 17 ஆயிரத்து 100 மாணவ-மாணவிகளுக்கு 96 ஆயிரத்து 470 பாடபுத்தகங்களும், பிளஸ்-2 படிக்கும் 15 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகளுக்கு 73 ஆயிரத்து 50 புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.
தற்போது மொத்தம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 4 லட்சத்து 46 ஆயிரத்து 520 புத்தகங்கள் தயாராக உள்ளன. இவை அனைத்தும் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே வழங்க தயாராக இருக்கவேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோர் உத்தவிட்டு உள்ளனர். இதற்கான பணிகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.