கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி செல்வி (வயது 45). இவர்களது மகன் பெரியசாமி.
இவர், அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரது மகள் பவுலியை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பெரியசாமியும், பவுலியும் வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி செல்வியை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொளஞ்சி தாக்கினார். இதில் செல்வி படுகாயம் அடைந்தார்.
மின் கம்பத்தில் கட்டி வைத்து செல்வியை தாக்கிய கொளஞ்சியை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, திடீரென வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது உடலில் உள்ள காயம் சரியாவதற்குள் வெளியேற்றப்பட்டதால் மனவேதனை அடைந்தார்.
அதன் பின்பு அவர் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தரையில் படுத்திருந்தார். இது பற்றிய தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகனுக்கு தெரிய வந்தது. உடனே அவரும், மாதர் சங்கத்தினர் மற்றும் செல்வியின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், செல்வியை தாக்கிய கொளஞ்சியை விடுவித்த போலீசாரை கண்டித்தும், ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் செல்விக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டாக்டர்கள், செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக கூறி அவரை ஆஸ்பத்திரிக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் செல்வியை தாக்கிய கொளஞ்சி கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.