செய்திகள்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தமா? அதிர்ச்சி தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் காகித பண புழக்கத்தில் சிக்கல் ஏற்பட்டதால், அதை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி இருக்கலாம் அல்லது புழக்கத்துக்கு விடாமல் வைத்துக் கொண்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இந்த உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால், காகித பண புழக்கம் பெருமளவு குறைந்தது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த அவதியை குறைப்பதற்காக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புதிய ரூ.500 நோட்டுகளையும் வெளியிட்டது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டதால் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக முதலில் காகித பண புழக்கம் சீராவதற்காக தேவையான அளவுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டு விட்டு, பின்னர் அவற்றை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி இருக்கலாம் அல்லது புழக்கத்துக்கு விடாமல் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

பாராளுமன்றத்தில் ரிசர்வ் வங்கி அளித்த தகவல்களின் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட எக்கோபிளாஷ் அறிக்கையில், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பரிமாற்றத்தில் சவால்களை ஏற்படுத்தின. எனவே முதலில் சகஜமான பணப் புழக்கத்துக்காக தேவையான அளவுக்கு வெளியிட்டு விட்டு, அடுத்து அவற்றை அச்சிடுவதை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது குறைந்த எண்ணிக்கையில் அச்சிட்டிருக்க வேண்டும் என்று கருத வேண்டியதிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.