மும்பை:
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நாணைய கொள்கை கூட்டம் இன்று நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உர்ஜித் படேல் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைத்து முடிவெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் நடந்த 2 நாணய கொள்கை கூட்டத்திலும் ரெப்போ ரேட் மாற்றப்படவில்லை. இன்றைய கூட்டத்தின் முடிவிலும் மாற்றத காரணத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ விகிதம் 6.0 சதவீதமாகவே நீடிக்கும்.
ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து எம்.எஸ்.எப், எஸ்.எல்.ஆர் போன்ற பிற வட்டி விகிதங்களிலும் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றங்களை அறிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், 7-வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட புதிய சம்பளத்தால் ஏற்படும் கூடுதல் செலவை சரிகட்டும் வகையில் நாட்டின் வர்த்தகச் சந்தையை ஊக்குவிப்பதற்காக தற்போது வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவை ரிசர்வ் வங்கி கைவிட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.