புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி தலைமையில் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலைக்குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். அப்போது, ஆஜராகி இருந்த மத்திய நிதிச்சேவைகள் துறையின் செயலாளர் ராஜீவ் குமாரிடம் நிலைக்குழு உறுப்பினர்கள் வங்கித்துறை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதைத் தொடர்ந்து வங்கிகளில் நடைபெறுகிற மோசடிகள் தொடர்பாக பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேலை அழைத்து விசாரிக்க உறுப்பினர்கள் முடிவு செய்தனர். அடுத்த (மே) மாதம் 17-ந் தேதி அவர் நேரில் ஆஜராக அழைக்கப்படுகிறார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுத்துறை வங்கிகளை கையாள்வதற்கு ரிசர்வ் வங்கிக்கு போதுமான அதிகாரங்கள் இல்லை என்று உர்ஜித் பட்டேல் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே ரிசர்வ் வங்கிக்கு என்ன மாதிரியான அதிகாரங்கள் தேவை என அவரிடம் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பும்.