ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தொடர் நாயகன் விருது பெற்று அசத்தினார். ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த வகையில் விளையாட வில்லை. என்றாலும், இலங்கைக்கு எதிராக 26-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி இருக்கிறார்.
இவர் 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட்டில் அறிமுகமானார். தற்போது வரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 142 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் தன் குழந்தையை முதன்முறையாக பார்த்துள்ளார்.
இதற்கிடையில் அவர் அறிமுகமான காலத்தை ஜடேஜா நினைவு கூர்ந்தார். அப்போது ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் என்று எனக்குத் தெரியாது. மேலும், அவர் என்னை ‘ராக்ஸ்டார்’ என்று ஏன் அழைத்தார் என்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜடேஜா கூறுகையில் ‘‘வார்னரை முதன்முறையாக சந்திக்கும்போது, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று எனக்குத் தெரியாது. அவர் என்னை ‘ராக்ஸ்டார்’ என்று அழைத்தார். அதற்கான அர்த்தம் புரியவில்லை. நான் எந்த பாடலும் பாடவில்லை. சிறப்பாக ஏதும் செய்யவில்லை. ராக்ஸ்டார் என்ற அழைக்கப்படுவதற்கு நான் தகுதியானவன்தானா? என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது.
அவர் ஏன் அப்படி அழைத்திருப்பார் என்று எனது நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு என் நண்பர், உன்னுடைய முகத்தில் அளவிற்கு அதிகமாக க்ரீம் (வியர்வையில் இருந்து தப்பிக்க வீரர்கள் பூசிக் கொள்வார்கள்) தடவியிருப்பாய், என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்து இந்தியா திரும்பியதும் எனது மகள் நித்யானாவை பார்த்தது சிறந்த உணர்வாக இருந்தது. அவளுடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன்’’ என்றார்.