செய்திகள்

அந்தோணியார் சிலை கண்ணில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயம்

ராணிப்பேட்டை அருகே அந்தோணியார் சிலை கண்ணில் இருந்து தண்ணீர் வடியும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் டவுன்ஷிப் எதிரே நரசிங்கபுரம் பகுதியில் சர்ச் தெரு உள்ளது. அங்கு 1981-ம் ஆண்டு புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் இடத்தின் வலதுபுறம் சகாயமாதா சிலையும், இடதுபுறம் குழந்தை ஏசுவை கையில் ஏந்திய அந்தோணியார் சிலையும் உள்ளது.

இந்த சிலை ‘பிளாஸ்டர்ஆப் பாரிஸ்’ என்ற சிமெண்டால் வடிவமைக்கப்பட்டதாகும். நேற்று மாலை 6 மணியளவில் இந்த ஆலயத்திற்கு சிப்காட் பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் வந்து, புனித அந்தோணியார் சிலை முன்பு மண்டியிட்டு ஜெபம் செய்தார்.

பின்னர் எழுந்து பார்த்தபோது அந்தோணியார் சிலையின் வலது கண்ணில் இருந்து தண்ணீர் வடிந்ததை கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதுபற்றி கோவில் பாதிரியார் மற்றும் கோவிலில் இருந்தவர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர் ஆலயத்திற்கு வந்து சிலையின் கண்ணில் தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்துச் சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை பாதிரியார் நடத்தினார். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர். கோவிலுக்கு வந்தவர்கள் சிலையின் கண்ணில் இருந்து வடிந்தது தண்ணீர் இல்லை கண்ணீர் என பேசிக்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.