புதுடெல்லி:
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை உலகிலேயே 2-வது பெரிய ஜனாதிபதி மாளிகை ஆகும். ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களுடைய ஆட்சி தலைவரான வைசிராய் தங்கும் மாளிகையாக இது இருந்து வந்தது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் இந்திய ஜனாதிபதி மாளிகையாக மாறியது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் இங்கு அடிக்கடி தடபுடலாக விருந்துகள் நடப்பது வழக்கம். முக்கிய பிரமுகர்களுக்கு, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வைசிராய் அடிக்கடி விருந்து கொடுப்பார். இதற்காக விசேஷ சமையல் கலைஞர்கள் ஜனாதிபதி மாளிகையில் நிரந்தரமாக இருந்தனர்.
அதேபோல் இப்போது ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உணவு தயாரித்து கொடுப்பதற்காக விசேஷ ‘செப்’ தலைமையில் சமையல் கலைஞர்கள் குழு உள்ளது.
ஜனாதிபதி கேட்கும் விதவிதமான உணவுகளை அவர்கள் சமைத்து கொடுப்பது வழக்கம். ஒரு சில ஜனாதிபதிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் சாப்பாட்டு பிரியர்களாக இருந்து விசேஷ சாப்பாடுகளை தயாரிக்க செய்தனர்.
அப்துல்கலாம் போன்றவர்கள் ஒரு சமையல்காரரை மட்டுமே வைத்து சமைத்து சாப்பிட்டதும் உண்டு.
பிரதீபா பட்டீல் ஜனாதிபதியாக இருந்த போது தனக்கென மராட்டியத்தில் இருந்து 2 சமையல்காரர்களை அழைத்து வந்திருந்தார். முந்தைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் இருந்து ஒரு சமையல்காரரை அழைத்து வந்து கூடவே வைத்திருந்தார்.
பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் விசேஷ உணவான மீனில் தயாரிக்கப்படும் ஒரு உணவை விரும்பி சாப்பிடுவார். எனவே, எப்போதும் அந்த உணவு ஜனாதிபதி மாளிகையில் தயாரிக்கப்படும்.
இப்போது வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாப்பாட்டில் ஆர்வம் காட்டுவது கிடையாது. அவர் அசைவ உணவு சாப்பிடுபவர். ஆனாலும், அசைவ உணவு சாப்பிடுவதிலும் அதிக விருப்பம் இருப்பதில்லை.
எனவே, ஜனாதிபதி மாளிகையில் அசைவ உணவு சமைக்க வேண்டாம் என சமையல்காரர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். உணவில் சிறிதளவு மட்டும்தான் உப்பு இருக்க வேண்டும். அதிக மசாலாக்கள் சேர்க்க கூடாது எனவும் அவர் சமையல் கலைஞர்களிடம் கூறி இருக்கிறார்.
பீகார் மாநில சிற்றுண்டிகள் அவருக்கு பிடிக்கும். எனவே, அந்த உணவுகளை தயாரித்து வழங்கும்படி கேட்டு கொண்டுள்ளார். மேலும் உணவுக்காக அதிகமாக செலவு செய்ய கூடாது என்றும் தனது உத்தரவில் கூறி இருக்கிறார்.
வெளிநாட்டு விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு விருந்து அளிப்பது ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயமாக உள்ளது. அந்த விருந்தில் அசைவ உணவுகளும் பரிமாறப்படும். இவற்றை சமைப்பதற்காக இந்திய சுற்றுலாத்துறை ஓட்டல் சமையல் கலைஞர்கள் அல்லது தாஜ் ஓட்டல் சமையல் கலைஞர்களை அந்த நேரத்தில் மட்டும் அழைத்து கொள்வார்கள்.