செய்திகள்

ராமேசுவரம் பயணிகள் ரெயிலில் கரப்பான் பூச்சி- பயணிகள் அவதி

மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் ரெயில்களில் கரப்பான் பூச்சிகள் தொல்லை இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு தினமும் காலை 6.50, மதியம் 12.40, மாலை 6.10 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

ரெயில்களில் உள்ள பெட்டிகளில் கரப்பான் பூச்சிகள் கூட்டம் கூட்ட மாக திரிகின்றன. இருக்கைகளுக்கு கீழும், ஜன்னல் பகுதியிலும், கழிப்பறைகளிலும் கரப்பான் பூச்சிகள் படையெடுத்த வண்ணம் உள்ளன.

இவை மேலாடை, உள்ளாடைகளுக்குள் புகுந்து தொல்லை செய்கிறது. மேலும் பயணிகளின் உடமைகள், உணவு பொட்டலங்களுக்குள்ளும் சென்றுவிடுகிறது.

குறிப்பாக ஜன்னல் ஓரங்களில் அமரும் பெண்கள், சிறுவர்களை அச்சப்படுத்தும் வகையில் கரப்பான் பூச்சிகள் திரிகின்றன.

இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் அவர்கள் சாப்பிடும் திண்பண்டங்களை குப்பைத் தொட்டியில் போடாமல் ரெயில் பெட்டிக்குள்ளேயே போடுவதாலேயே கரப்பான் பூச்சிகள் அதிக அளவில் இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே பயணிகள் திண்பண்டங்களை சாப்பிட்டு முடித்தவுடன் தொட்டியில் போட வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இந்த ரெயில்களில் உள்ள ரெயில் பெட்டிகளில் பெரும்பான்மையான மின் விசிறிகள் செயல்படாமல் பழுதடைந்துள்ளன. அதனால் கோடை வெப்பத்தில் அவதிப்பட்டு வரும் பயணிகள் மேலும் அவதியடைகின்றனர்.

பழுதடைந்த மின்விசிறிகளை சீர்செய்வதற்கான கார்பன் உள்ளிட்ட உதிரி பாகங்கள் இருப்பு இல்லாததாலேயே மின் விசிறிகளை சீர்செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.