கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. ஆனால் அவர்கள் 3 ஆண்டுகளில் இந்தியாவை 15 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதாக வாய்ஜாலம் மட்டும் காட்டுகிறார்கள். சுதந்திரத்துக்கு பிறகு இணைந்து வாழ்ந்த மக்களை பிரிக்க பார்க்கிறார்கள்.
மத விவாதங்களை பெரிதாக்கி நாட்டில் பெரும் பிரச்சினையை உருவாக்க பார்க்கிறார்கள். ஆட்சி பொறுப்புக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன பின்பும் கல்வி முறையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. விவசாயிகளையும் புறக்கணிக்கிறார்கள்.
மராட்டியம், உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் பிரச்சினைக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. எனவே தான் நாள் ஒன்றுக்கு 35 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. 65 சதவீத விவசாயிகளுக்காக மத்திய அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நெல், ரப்பர், கரும்பு, தேங்காய் போன்ற விவசாய பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார். இந்தியாவிற்கு வர அவருக்கு நேரமில்லை. வெளிநாட்டுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். நாட்டின் மீது ஆர்வம் காட்டவில்லை. இந்தியா முன்னோக்கி போகிறது என்ற வாசகத்தை கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பதையே அவர்களின் நடவடிக்கை காட்டுகிறது.
வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவேன் என்றார். ஆனால் இதுவரை எதுவும் கொண்டு வந்ததாக தெரியவில்லை. எனவே இந்தியாவை இருண்ட பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து சந்திப்போம்.
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தோல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி அரசு மக்களின் வெறுப்பை சந்தித்து வருகிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் அவர்கள் மதுபார்களை திறக்க அனுமதி அளித்துள்ளனர். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், பிரதமர் மோடியும் ஒன்று போலவே செயல்படுகிறார்கள்.
கேரளாவில் விலைவாசி உயர்வும் மக்களை பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கி உள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.55-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரள மக்கள் பா.ஜனதாவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சரக்கு சேவை வரி விதிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஒரு சில மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் வக்கீல் ராதாகிருஷ்ணன், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. , பிரின்ஸ் எம்.எல்.ஏ. முன்னாள் மாவட்ட தலைவர்கள் அசோகன்சாலமன், கண்ணாட்டு விளை பாலையா, நகர தலைவர் மாகின் ஆகியோர் உடனிருந்தனர்.