குழித்துறை:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று குமரி மேற்கு மாவட்டம் மேல்புறத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு, பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அடிப்படையில் மாற்றுவதாக அறிவித்தது. ஆனால் கச்சா எண்ணை விலை குறைந்த பின்பும், அவர்கள் இங்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வில்லை.
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு சாதனையை கொண்டாடி வருகிறது. ஆனால் அவர்கள் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. அனைத்து துறைகளிலும் தோல்வியே அடைந்து உள்ளது. மேலும் இங்கு வகுப்பு வாத மோதல்களும் அதிகரித்து விட்டது.
பதவிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என பாரதிய ஜனதா அறிவித்து இருந்தது. ஆனால் பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆனபின்பும் 1½ லட்சம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை.
மத்திய அரசு, அ.தி.மு.க.வை மிரட்டி வருகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காதது, உதய் திட்டத்தை கொண்டு வந்தது ஆகியவை மூலம் புரிந்து கொள்ளலாம்.
மேலும் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை இன்னும் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கவில்லை.
தமிழகத்தில் வறட்சி நிவாரண பணிகள், வகுப்பு வாதம் தலைதூக்குவதை தடுக்கும் நோக்கில் நாங்கள் தி.மு.க.வுடன் இணைந்து நட்புடன் செயல்பட்டு வருகிறோம். இதை கூட்டணிக்கான அச்சாரமாக கருதக்கூடாது.
ரஜினிகாந்த் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி, அரசியலுக்கு வரும் முன்பு அவரது கொள்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும். அதன்பின்பே இது பற்றி கருத்து தெரிவிப்போம்.
கேரளாவில் மீண்டும் மதுபார்கள் திறக்க அங்குள்ள அரசு உத்தரவிட்டிருப்பது அந்த மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மேற்கு மாவட்டம் மேல்புறத்தில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. செம்மங்காலையில் உள்ள நினைவு ஸ்தூபியும் உடைக்கப்பட்டது. அதனை ஜி.ராமகிருஷ்ணன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்த்தார்.
அவருடன் முன்னாள் எம்.எல்.எ.க்கள் நூர் முகம்மது, லீமா ரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.