சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தி பணிய வைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்தாமல் போராட்டத்தை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்; அதுவரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; ஒப்பந்த பணி முறையை ஒழித்து விட்டு அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகும்.
தமிழக அரசு நினைத் திருந்தால் இந்தக் கோரிக்கைகளை எப்போதோ நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பதாகக் கூறி, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட குழுக்கள் பெயரளவிலேயே உள்ளனவே தவிர இன்று வரை எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை.
அரசு ஊழியர்கள் பல மாதங்களுக்கு முன்பே வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டுவிட்ட நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்தை அரசு தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், போராட்டம் தொடங்குவதற்கு முதல் வாரம் அமைச்சர்கள் குழுவும், முதல் நாளில் முதல்-அமைச்சரும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுக்களில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதை விட, அவர்கள் அச்சுறுத்தப்பட்டது தான் அதிகமாகும். அது மட்டுமின்றி, அரசு ஊழியர் கூட்டமைப்பை உடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை பினாமி முதல்வர் ஈடுபட்டார்.
அடுத்தக்கட்டமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக்கூடாது? என்று விளக்கம் கேட்டு 85,000 ஊழியர்களுக்கு அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அரசு அச்சுறுத்தியுள்ளது.
இத்தகைய அடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும். 2003-ஆம் ஆண்டில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட முதல்-அமைச்சர் இறுதியில் தோல்வியடைந்ததை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
எனவே, அடக்கு முறைகளை கை விட்டு, ஆசிரியர்கள்அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.